த கிரேட் பேரிங்டன் பிரகடனம்

தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார விஞ்ஞானிகளாகிய எங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்19 கொள்கைகளின் உடல் மற்றும் மனநலனை சேதப்படுத்தும் தாக்கம் குறித்த கடுமையான கவலை உள்ளது. இதன் காரணமாக மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு என்ற அணுகுமுறையை நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

உலகெங்கிலும் இருந்து வரும் நாங்கள் எங்கள் பணித்துறையை மக்களின் பாதுகாப்புக்காக அர்பணித்துள்ளோம். தற்போதைய கோவிட்19 ஊரடங்கு கொள்கைகள் குறுகிய மற்றும் நீண்ட கால பொது சுகாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை உருவாக்குகின்றன.

இதன் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில விளைவுகள் ஆகிய, குறைந்து வரும் குழந்தை பருவ தடுப்பூசி விகிதங்கள், மோசமடைந்து வரும் இருதய நோய், குறைந்து வரும் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் மோசமடைந்து வரும் மனநலம், வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக இறப்பு விகிதத்திற்கு வழிவகுக்கும்.

இதன் விளைவாக தொழிலாளர் வர்க்கம் மற்றும் சமூகத்தின் இளைய உறுப்பினர்கள் அதிக சிரமப்படுகின்றனர். மேலும் மாணவர்களை பள்ளியில் இருந்து விலக்கி வைப்பது கடுமையான அநீதி ஆகும்.

ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை இந்த நடைமுறைகளை அமுலில் வைத்திருப்பது ஈடு செய்ய முடியாத சேதாரத்தை உண்டாக்கும். அதிலும் பின்தங்கியவர்கள் விகிதாசாரமாக பாதிக்கப்படுகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த வைரஸ் பற்றிய நமது புரிதல் வளர்ந்து வருகிறது. இளம் வயதினரை விட கோவிட்19 ஆல் ஏற்படும் இறப்பு விகிதம் முதிய மற்றும் பலவீனமானவர்களில் ஆயிரம் மடங்கு அதிகம் என அறிகிறோம். உண்மையில், குழந்தைகளில் ஏற்படும் குளிர்காய்ச்சல் போன்ற நோய்களைவிட கோவிட்19 குறைந்த அளவு ஆபத்தானது.

மக்கள் தொகையில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் போது பாதிக்கப்படக் கூடியவர் உள்ளிட்ட அனைவருக்கும் நோய் தொற்று உண்டாவதற்கான ஆபத்து குறைகிறது. உலகின் அனைத்து மக்கள்

தொகையும் கடைமுடிவாக சமுதாய நோய் எதிர்ப்புச் சக்தியை அடைவர் என நாம் அறிவோம். அதாவது புதிய நோய் தொற்றுக்களின் விகிதம் நிலைபடுத்தபடுகிறது. ஒரு தடுப்பூசி இந்த நிலைப்படுத்தலை அடைய உதவமுடியுமே தவிர அதை மட்டுமே சார்ந்தது அல்ல. ஆகவே நாம் சமுதாய நோய் எதிர்ப்புச் சக்தியை அடையும் வரை இறப்பு விகிதம் மற்றும் சமூகத்தில் உண்டாகும் தீமையை குறைப்பது நமது குறிக்கோள் ஆக இருக்க வேண்டும்.

இந்த சமுதாய நோய் எதிர்ப்புச் சக்தியை அடைவதில் உள்ள அபாயங்கள் மற்றும் நன்மைகளை சமநிலைபடுத்தும் மிகவும் இணக்கமான அணுகுமுறை என்னவென்றால், இறப்பதற்கு குறைந்த பட்ச ஆபத்து உள்ளவர்களை சாதாரணமாக வாழ அனுமதிப்பது மற்றும் இயற்கை தொற்று ஏற்பட செய்வது மூலம் சமுதாய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்து, அதே சமயம் அதிக ஆபத்துக்கு உட்பட்டவர்களை சிறப்பாக பாதுகாப்பதும் ஆகும். இதையே நாங்கள் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை என அழைக்கிறோம்.

பாதிக்கப்பட கூடியவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்று நடத்துவது கோவிட்டுக்கான பொது சுகாதார முறைகளின் மைய நோக்கமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மருத்துவமனைகள் ஏற்கனவே நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்த பணியாளர்களை பயன்படுத்துவதோடு அல்லாமல் மற்ற பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை பிசிஆர் பரிசோதனைக்கு அடிக்கடி உட்படுத்த வேண்டும். பணியாளர்கள் சுழற்சி குறைக்க பட வேண்டும். ஓய்வுபெற்ற மக்களுக்கு மளிகை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அவர்கள் வீட்டிலேயே வழங்கப்பட வேண்டும். முடிந்த வரையில் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்திக்கும் போது வெளியே சந்திக்க வேண்டும். கூட்டு குடும்பங்கள் குறித்த அணுகுமுறைகள் உட்பட நடவடிக்கைகளின் விரிவான விவரங்கள் அடங்கிய பட்டியல் செயல்படுத்தபட வேண்டும். மேலும் இது பொது சுகாதார வல்லுனர்களின் நோக்கம் மற்றும் திறனுக்கு உட்பட்டது ஆகும்.

எளிதில் பாதிக்கப்படாதவர்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும். சமுதாய நோய் எதிர்ப்புச் சக்தியின் உச்ச வரம்பை குறைக்கும் முகமாக எளிய சுகாதார முறைகளான கை கழுவுதல் மற்றும் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது வீட்டிலேயே இருத்தல் போன்ற நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளும், கல்லூரிகளும் நேரில் கற்பிப்பதற்கு திறக்கப்பட வேண்டும். விளையாட்டு போன்ற பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். குறைந்த ஆபத்துக்குட்பட்ட இளம் வயதினர் வீட்டிலிருந்து வேலை செய்யாது இயல்பு வாழ்க்கைக்கு

திரும்ப வேண்டும். உணவகங்கள் மற்றும் பிற வணிகங்கள் திறக்கப்பட வேண்டும். கலை, இசை, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் தொடர்பான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். அதிக ஆபத்தில் உள்ளவர்கள் அவர்கள் விரும்பினால் இவற்றில் பங்கேற்கலாம். அதேசமயம் சமுதாய நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட கூடியவர்களுக்கு தரும் பாதுகாப்பின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயமும் இதை அனுபவிக்கிறது.

அக்டோபர் 4, 2020 அன்று, இந்த அறிவிப்பு அமெரிக்காவின் கிரேட் பேரிங்டனில் எழுதப்பட்டது மற்றும் கையொப்பமிடப்பட்டது.

மருத்துவர் மார்டின் குள்டோர்ப், தீவிர தொற்றுநோய் பரவலை கண்டறிந்து கண்காணிப்பது மற்றும் தடுப்பூசி பாதுகாப்பு மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ பேராசிரியர் (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), உயிரியலாளர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்.

மருத்துவர் சுநேத்ரா குப்தா, நோயெதிர்ப்பு துறை, தடுப்பூசி வளர்ச்சி மற்றும் தொற்றுநோய் குறித்த கணித மாடலிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்.

மருத்துவர் ஜெய் பட்டாச்சார்யா, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் பேராசிரியர், மருத்துவர், தொற்றுநோயியல் நிபுணர், சுகாதார பொருளாதார நிபுணர் மற்றும் பொது சுகாதார கொள்கை நிபுணர் (தொற்றுநோய் மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்கள்).

Translation by Maninghandan Nerur